தமிழ்

திருத்தலவரலாறு

          சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்க்காக பூலோகத்தில் தட்சன் யாகம் செய்தான். தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள் மறுதார் சிவன். சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சயாணி. தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம், தனிமைத்துயர் பிரிவுத்துயர்
தட்சனால் தன் மனைவி அவமானப்பட நேருமே என்ற கோப உணர்வு ஆகியவற்றால் குழம்பிப்போன சிவன் பூலோகம் வர எண்ணி தனது ஒரு பாதத்தை பூமியிலுள்ள இராஜகம்பீர மலையில் வைத்தார். (இது நம் திருக்கோயில் ஊரில் உள்ள மலை).
ஈசனின் வெப்பம் தாளாத மலை எரிந்து, அவர் பாதம்பட்ட பகுதி பூமியில் அழுந்தியது. எனவே அடுத்த அடியை மலைமீது வைக்காமல் தரையில் வைக்க எண்ணிய சிவன், வலது பாதத்தை திருவண்ணாமலை அருகே உள்ள அடி அண்ணாமலையில் தரையில் வைத்தார். இராஜகம்பீர மலையில் அழியாமல் உள்ள ஈசனின் இடது பாதசுவடு உள்ள பகுதி “மிதி மலை” என்று அழைக்கப்பட்டு வருகிறது. இன்றும் பக்தர்களால் அப்பாத சுவடு வழிபாடு செய்யப்படுகிறது. தீப்பிழம்பாக மாறிய ஈசனின் தலையில் இருந்த கங்கை தீயை அணைத்து பிரளயத்தைத் தடுக்க தன் தமயன் திருமாலிடம் வேண்டினாள். அவ்வேண்டுதலுக்கு இணங்க இராஜகம்பீர மலையை சுற்றி ஏழு நீர்நிலைகளை ஏற்படுத்திய திருமால் அந்நீரால் தீயை அணைத்தார். இன்றளவும் இம்மலையைச்சுற்றி விஷ்ணுவின் பெயரில்

 1. பெருமாள் குளம்,
 2. ஊற்று பெருமாள் குளம்,
 3. காட்டு பெருமாள் குளம்,
 4. வாணிய பெருமாள் குளம்,
 5. கோமூட்டி பெருமாள் குளம்,
 6. குட்டக்கரை குளம்,
 7. வெறும் குளம்

என ஏழு குளங்களும் தற்போதும் இருந்து வருகின்றன.இதனால் மகிழ்ந்த கங்கை தன் தமையனை பெருமையுடன் வழிபட்டாள். கங்கை வழிபட்ட இடத்தில் திருவேங்கடநாதன் ஐயனுக்கும், (கல்வெட்டில் கண்டுள்ளபடி) சிவனின் திருவடிக்கும் (திருப்பாதம்) தனித்தனி சன்னதிகளுடன், வடக்கிலும், கிழக்கிலும் மூன்று நிலை இராஜ கோபுரங்களைக் கொண்டு கங்கையம்மன் இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.

திருவிழாக்களும் வழிபாடுகளும்

கருவறையில் கையில் குவளையுடன் சாந்த சொரூபியாக அமர்ந்த நிலையில் முழு உருவத்துடன் அருளாட்சி செய்யும் கங்கையம்மனுக்கு ஆண்டு முழுவதும்,

 1. சித்திரை (ஏப்ரல்) முதல் நாள் தமிழ் புத்தாண்டு அன்று அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களுடன், தங்கள் கையினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பம்சம் ஆகும்.
 2. வைகாசி (மே) முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு வசந்த உற்சவம் அம்மனின் சிரசு ஊர்வலம், பூங்கரக ஊர்வலம், கூழ்வார்த்தல், வானவேடிக்கை, வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் அம்மனின் திருவீதி உலா நடைபெறும்.
 3. ஆடி (ஆகஸ்டு) ஆடிப்பூர நாளன்று சுமங்கலி பூஜையும், சிறப்பு யாகமும் நடைபெறும் அவ்வமயம் சுமங்கலிகள் அனைவருக்கும் 9 மங்கலப் பொருட்கள் வழங்கப்படும்.
 4. ஐப்பசி (அக்டோபர்­ நவம்பர்) நவராத்திரிவிஜயதசமி நாளன்று அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனைப் பெருவிழா நடைபெறுகிறது.
 5. கார்த்திகை (நவம்பர்­ டிசம்பர்) பரணி தீபத்திருநாள் அன்று கருவறையில் பரணி தீபமும் மறுநாள் திருக்கோயிலைச் சுற்றி 1008 தீபங்களும் அதே நாளில் மலை உச்சியில் விஷ்ணு தீபமும் ஏற்றப்படுகிறது.
 6. மார்கழி (டிசம்பர்­ ஜனவரி)மாதம் முழுவதும் அம்மனுக்கு தனூர் மாத சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் பக்தர்களின் பங்களிப்போடு நடைபெற்றுவருகிறது.
 7. தை (ஜனவரி) ஆஙகிலப்புத்தாண்டு தினத்தன்று சிறப்பு யாகம் செய்யப்படுகிறது. தைபூச திருநாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றுவருகிறது.
 8. பங்குனி (மார்ச்­ ஏப்ரல்) பங்குனி உத்திர திருநாளில் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.

அறக்கட்டளைகள்

நம் திருக்கோயில் மூன்று முக்கிய அறக்கட்டளைகளைக் கொண்டுள்ளது.

 1. நித்ய கால அர்ச்சனைக்கட்டளை

விருப்பமுள்ள பக்தர்கள் குறிப்பிட்ட தொகையை வங்கி வைப்பு வைத்து அதன் வட்டியைக் கொண்டு ஆயுட்காலம் முழுவதும், தங்களின் விருப்பமான நாட்களில் தங்களது பெயர்களில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். பக்தர் ஒருவர் எத்தனை நாள் வேண்டுமானாலும், யார் பெயரில் வேணடுமானாலும், எந்த நாளில் வேண்டுமானாலும் கட்டணம் மூலம் நாட்களை நிர்ணயித்துக் கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

 1. நித்யகால நிவேத்திய கட்டளை

விருப்பமுள்ள பக்தர்கள் குறிப்பிட்ட தொகையை வங்கியில் வைப்பு நிதியாக கொண்டு ஆண்டின் ஒரு நாளில் காலை, மாலை என இரு வேளைகளில் அதன் வட்டியைக் கொண்டு அவரின் தலைமுறைகள் வரை (சந்திரன் சூரியன் இயங்கும் வரை) அம்மனுக்கு நிவேத்தியம் செய்யப்படும். இதன்மூலம் இடைவிடா வழிபாடு அம்மனுக்கு நடைபெறும்.

 1. கங்கையம்மன் கல்வி அறக்கட்டளை

இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டில் 3 ஏழைகளுக்கு திருமணம் (பிற்காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கலாம்) செய்து மாங்கல்யம், துணிமணிகள், சீர்வரிசை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 ஏழை மாணவமணிகளுக்கு (பிற்காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கலாம்)நோட்டுப்புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இறைபணி மன்றம் இறைபணி செய்வதற்கென்றே துவங்கப்பட்ட இம்மன்றம் தற்போது தலைவர், துணைத்தலைவர், பொருளர், செயலர், துணைச் செயலர்கள் மற்றும் குழுஉறுப்பினர்கள் என 33 ஆயுட்கால உறுப்பினர்களைக் கொண்டு திறம்பட இயங்கி வருகிறது.

திருக்கோயிலின் இறைபணிகள் அனைத்தும் இறைபணி மன்றம் வாயிலாகவே நடத்தப்படுவதுடன் தணிக்கையும் செய்யப்படுகிறது.